Wednesday, April 27, 2011

பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.


இதோ ஓர் அற்புதமான உருவகம்! உடலைத் தேராகவும், ஆன்மாவைச் சவாரி செய்பவராகவும், புத்தியைத் தேரோட்டியாகவும், மனத்தைக் கடிவாளமாகவும், புலன்களைக் குதிரைகளாகவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். யாருடைய குதிரைகள் நன்கு பழக்கப்பட்டு இருக்கின்றனவோ, கடிவாளம் உறுதியாக உள்ளதோ, தேரோட்டி (புத்தி) அதை நன்றாகப் பிடித்திருக்கின்றானோ, அவனே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையான தன் குறிக்கோளை அடைவான்.

யாருடைய குதிரைகள் (புலன்கள்) அடக்கப்படாமலும், கடிவாளம் (மனம்) உறுதியாகப் பிடிக்கப்படாமலும் இருக்கின்றனவோ, அவன் அழிவை நோக்கிப் போகின்றான்.

நீங்களே தூய்மை பொருந்தியவர்கள் என்பதை உளமாற நம்புங்கள். ஓ மாபெரும் வீரனே! கண்விழித்து எழுந்திரு. இந்த உறக்கம் உனக்குப் பொருந்தாது. விழித்துக்கொள். எழுந்து நில். துன்பப்படுபவனாகவும் பலவீனனாகவும் உன்னை நீ நினைக்காதே.

எல்லாம் வல்ல ஆற்றல் படைத்தவனே! விழித்தெழுந்தூன் இயல்பை நீ வெளிப்படுத்து. உன்னை நீயே பாவி என்று நினைப்பது உனக்குப் பொருந்தாது. உன்னை நீயே பலவீனன் என்று நீ கருதுவதும் உனக்குப் பொருந்தாது.

இந்த உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல். உனக்கும் சொல்லிக்கொள். அப்போது உன் வாழ்க்கையில் ஏற்படும் விளைவை நீ கவனி. மின்னல் வேகத்தில் எப்படி எல்லாமும் மாறிவிடுகிறது என்பதைப் பார். பின்பு அந்த உண்மைகளை மனிதகுலத்திற்கு எடுத்துச் சொல். அதன் மூலம் மக்களுக்கு அந்த உண்மைகளின் ஆற்றலை எடுத்துக்காட்டு.

உன்னைப் போன்ற மக்களிடம் தான் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் சொற்களின்
உண்மையான கருத்தைப் புரிந்து கொண்டு அந்த ஒளியில் உன்னைச் செயலில் ஈடுபடுத்திக்கொள். உனக்கு நான் போதுமான அளவுக்கு அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன். இப்போது அதில் சிறிதளவாவது செயலுக்குக் கொண்டுவா. என் அரிவுரைகளை கேட்டதன் பயனாக வாழ்க்கையில் நீ வெற்றியைப் பெற்றாய் என்பதை உலகம் புரிந்து கொள்ளட்டும்.

- சுவாமி விவேகானந்தர்.

No comments:

Post a Comment